Published : 08 Jul 2024 11:23 AM
Last Updated : 08 Jul 2024 11:23 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என எழுந்து வரும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இக்கொலையில் பிற மாவட்ட ரவுடிகளுக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது.
கொலையாளிகள் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை அடிப்படையாக வைத்து செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். முதல் கட்டமாக, கொலை தொடர்பாக மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெருவைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33), திருநின்றவூர் ராமு என்ற வினோத் (38), அதே பகுதியைச் சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு (ஞாயிற்றுகிழமை) மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை எனவும் போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உண்மை நிலை வெளியே வரவேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாற்ற வேண்டும் என ஆம்ஸ்டராங் ஆதரவாளர்களும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கொலைக்கு மூளையாக செயல்பட்டது ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு எனக் கூறப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் கொலையாளிகளின் மொத்த விவரமும் தெரியவரும் என போலீஸார் நம்புகின்றனர். அதனால் 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிற மாவட்ட ரவுடிகளுக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார் தங்களது விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT