Last Updated : 06 Jul, 2024 05:49 AM

 

Published : 06 Jul 2024 05:49 AM
Last Updated : 06 Jul 2024 05:49 AM

ரவுடி கொலைக்கு பழிதீர்க்கப்பட்டாரா ஆம்ஸ்ட்ராங்? - 8 பேர் கைது; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழி தீர்க்க இந்தப் படுகொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியது.

இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

பழிக்குப் பழி?- தனிப்படை போலீஸார் அருள் (33), செல்வராஜ் (48), மணிவண்ணன் (25), திருமலா (45), பொன்னை பாலு (39), ராமு (38), சந்தோஷ் (32), திருவேங்கடம் (33), ஆகிய 8 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஏற்கெனவே கடந்தாண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை தனிப்படை போலீஸார் முடிக்கி விட்டுள்ளனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடம் அதை சுற்றிப் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்தும் மீதமுள்ள தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர்களையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

நடந்தது என்ன? - பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு: இது ஒரு புறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங் வீடு உள்பட சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x