Published : 06 Jul 2024 06:03 AM
Last Updated : 06 Jul 2024 06:03 AM

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சென்னையில் பதற்றம் - நடந்தது என்ன?

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர்கொண்ட கும்பலால் நேற்று மாலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தசம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் வடசென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சட்டப்படிப்பு படித்திருந்த இவர் ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர், நீதிமன்றம் சென்று தன் மீதான அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்.

இருப்பினும் பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம்வந்தார். அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி நேரமும் உடனிருந்து வந்ததாக தெரிகிறது.

ஆம்ஸ்ட்ராங் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவரை மட்டும்தான் பார்ப்பார். தன்னை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவாறு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். கடந்த 2008-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவருமான மாயாவதியை அதே ஆண்டு டிசம்பர்22-ம் தேதி சென்னை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தி அக்கட்சியினரிடையே நன்மதிப்பை பெற்றார்.

இதனிடையே அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் மற்றும் தொழில் போட்டியாளர்களிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் பெரும்பாலும் வெளியே வருவதை குறைத்துக் கொண்டார். மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஆதரவாளர்கள் புடைசூழ சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனதுவீட்டினருகே தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு இருசக்கர வாகனங்களில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல், மின்னல் வேகத்தில் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே சுற்றிவளைத்து அவரை சரமாரியாக வெட்டியது.

அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றும் ஆம்ஸ்ட்ராங்கால் முடியவில்லை. இந்ததாக்குதலில் நிலை குலைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் உடனடியாக ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்,கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, வட சென்னை இணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்தியை அறிந்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பூர் செம்பியத்தில் திரண்டனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீடு மற்றும் கொலை நடந்த இடங்களில் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், சென்னை முழுவதும் போலீஸார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல், பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ளவர்களை கைது செய்து கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகபொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தும்,குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

புரட்சி பாரதம் முதல் பகுஜன் சமாஜ் வரை: சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார். பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வந்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007-ம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அனைவரின் கவனத்தையும் பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார்.

இந்நிலையில், மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இது தமிழக பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x