Published : 05 Jul 2024 06:33 AM
Last Updated : 05 Jul 2024 06:33 AM

பல்லாவரம் | மருந்து கடை உரிமையாளரை கடத்திய கும்பல் கைது

பல்லாவரம்: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் அசாருதீன் (33). இவர், குரோம்பேட்டையில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மெடிக்கல் கடையில் வியாபாரம் நன்றாக இருப்பதை கவனித்த ஒரு கும்பல் 10 நாட்களாக இவரை பின்தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அசாருதீன் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த அக்கும்பல் ஒரு காரில் வந்து திருநீர்மலை பிரதான சாலையில் அவரை மடக்கியது.

காரில் இருந்து இறங்கிய கும்பல், தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டு,அசாருதீன் சட்டவிரோதமாக மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவரை விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அவரது கண்களைக் கட்டி பம்மல் அருகே உள்ள ஒரு சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து அவரை போலீஸ் போன்ற தோரணையில் அடித்துஉதைத்து விசாரணை நடத்தத் தொடங்கினர். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.7.5 லட்சம் தர வேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் அதே இடத்தில் என்கவுன்ட்டர் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

வந்திருப்பது போலி போலீஸ் என்று தெரியாமல் அசாருதீன், அவர்கள் கேட்டதொகையை 3 தவணைகளாக கொடுத்துள்ளார். அவரிடம் பணம் பறிப்பதற்காக, அந்த கும்பல் கடந்த 29-ம் தேதி மீண்டும்அவரை செல்போனில் தொடர்பு கொண்டுபேசியது. இந்த முறை தங்களுக்கு ரூ.30லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அசாருதீன், இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி பல்லாவரம், மீனாட்சி நகர், கலாதரன் தெருவை சேர்ந்த இம்ரான்(27), காஞ்சிபுரம், மிலிட்டரி சாலை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்(எ)சதாம்(28), பம்மல், கிருஷ்ணா நகர் 4- வது தெருவை சேர்ந்த சதீஷ் (29), பம்மல், கிரிகோரி ஸ்கொயர் பகுதியைச் சேர்ந்த யஷ்வந்த் பாபு(33), பெரும்பாக்கம் கார்மேகம் (38), ஜமீன் பல்லாவரம், லெட்சுமி காலனி பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் ராவ்(27), குன்றத்தூர்,வேலாயுதம் தெருவைசேர்ந்த அந்தோணி ராஜ்( 36), சென்னை, வஉசி நகர், நேதாஜி தெருவை சேர்ந்த முகமது ரபீக் (40), கொல்லச்சேரி பகுதியை சேர்ந்த அருண் குமார்(40) ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கை விலங்கு, வாக்கி டாக்கி மற்றும் பொம்மை துப்பாக்கி, செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 9 பேர்மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x