Published : 04 Jul 2024 08:22 AM
Last Updated : 04 Jul 2024 08:22 AM
சென்னை: தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்ததால் கைது செய்யப்பட்ட கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சனிவரப்பு வெங்கடசிவ ரெட்டி. ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக இவரிடம் கூறிய மர்ம கும்பல், ரூ.2 கோடி முன்பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் கடந்த ஆண்டு நவம்பரில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி, துணை ஆணையர் நிஷா மேற்பார்வையில் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த உதய கிருஷ்ணா என்ற முகமது தாவூத்கான், இந்த மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது. ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அவரை போலீஸார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரிய பைனான்சியர் என்று அறிமுகம் செய்துகொண்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாக பல தொழிலதிபர்களை ஏமாற்றி, ரூ.15 கோடி வரை இவர் மோசடி செய்ததும், இதனால், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருவதும் தெரியவந்தது.
முகமது தாவூத்கான் கூட்டாளிகள் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி விவகாரம் தொடர்பாக, சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT