Published : 03 Jul 2024 03:06 PM
Last Updated : 03 Jul 2024 03:06 PM
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடன் தன்னை மன்னித்துவிடும்படி உருக்கமாக கடிதம் எழுதி வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த சித்திரை செல்வின்(79) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் தங்களது மகனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் 17-ம் தேதி கணவனும், மனைவியும் சென்னைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டை பராமரிப்பதற்காக செல்வி என்ற பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வந்த பராமரிப்புப் பெண் செல்வி, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, சென்னையில் இருந்த சித்திரை செல்வினுக்கும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெஞ்ஞானபுரம் போலீஸார், சித்திரை செல்வினை தொடர்பு கொண்டு பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் பண, நகை விவரங்களை கேட்டறிந்து சோதனை செய்தனர்.
அப்போது, பீரோவில் வைத்திருந்த ரூபாய் 60 ஆயிரம் ரொக்க பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான். அந்தக் கடிதத்தில், ‘என்னை மன்னித்து விடுங்கள்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பித் தந்து விடுகிறேன். என் வீட்டில் (மனைவிக்கு) உடம்பு சரியில்லை அதனால் தான்’ என உருக்கமாக பச்சை நிற மையில் எழுதி இருக்கிறான் அந்தத் திருடன். கடிதத்தை கைப்பற்றி மெஞ்ஞானபுரம் போலீஸார் விசாரணை நடத்தி திருடனை தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்ததை விடவும் திருடன் உருக்கமாக எழுதிவைத்துவிட்டுப் போன கடிதத்தைப் பற்றித்தான் மெஞ்ஞானபுரம் பகுதியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT