Last Updated : 29 Jun, 2024 04:09 PM

 

Published : 29 Jun 2024 04:09 PM
Last Updated : 29 Jun 2024 04:09 PM

ஆன்லைன் வர்த்தகத்தில் பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி மோசடி: சென்னையில் இருவர் கைது

கைதானவர்கள்

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என கூறி பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வானகரத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், ‘எனக்கு முகநூல் மூலம் ஆன்லைன் முதலீடு வர்த்தகம் தொடர்பான விளம்பரம் வந்தது. அதைப் பார்த்துவிட்டு தொடர்பு கொண்ட போது, எனது செல்போன் எண்ணை ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்றில் அது இணைத்தது. அந்தக் குழுவில் பேசிய நபர்கள், லிங்க் ஒன்றை அனுப்பினர். அந்த லிங்க் வழியே நான் முதலீடு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தேன்.

முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் சொன்ன ஆசை வர்த்தைகளை நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.1,19,67,381 பணத்தை பலகடங்களாக செலுத்தினேன். ஒவ்வொரு முறை நான் பணம் செலுத்தும் போது, செலுத்திய பணத்துக்கு லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் அவர்கள் அந்த செயலி மூலமாக காண்பித்தனர்.

இதையடுத்து, நான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறி எண்ணிடம் மேலும் பணம் கேட்டனர். இதனால், சந்தேகமடைந்து, பணத்தை எடுக்க முயன்றேன். ஆனால், என்னால், பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது திருவொற்றியூரைச் சேர்ந்த சதீஷ்குமார்(35) மற்றும் சதீஷ்(26) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.23.80 லட்சம் பணம், 2 தங்க செயின், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப், வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், “சமீப காலமாக ஆன்லைன் முதலீடு, ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பாக சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் ஆசைகாட்டி பணத்தை பெற்று மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று வரும் போலியான விளம்பரங்களை கண்டு, பணத்தை அனுப்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் இது போன்ற மோசடியில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிலும் http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x