Published : 26 Jun 2024 09:06 AM
Last Updated : 26 Jun 2024 09:06 AM
சென்னை: திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையில் சென்னை காவல் துறையில் நவீன நடமாடும் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை விகிதம் அதிகளவில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க பலர் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கின்றனர்.
இப்படியான சூழலில் போலீஸார் எவ்வளவுதான் கண்காணிப்பை பலப்படுத்தி இருந்தாலும் ஆங்காங்கே தினமும் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வருகிறது. இது போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இத்திருட்டை தடுக்கும் வகையில் சென்னை போலீஸார் நடமாடும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் சாலை சந்திப்புகளில் இந்த நடமாடும் கேமராக்களை வைக்கின்றனர். சாலை வழியாக வரும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை இந்த கேமரா துல்லியமாக படம் பிடிக்கும். ஏற்கெனவே, திருடு போன வாகனங்களின் எண்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும். அந்த வாகனங்கள் சாலையில் செல்லும்போது அதை படம் பிடித்து போலீஸாருக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் வாகனம் மீட்கப்படுவதுடன், வாகன திருட்டில் ஈடுபட்டு அதை ஓட்டி வரும் நபரும் பிடிபடுவார்.
அதையும் தாண்டி, இருசக்கர வாகனம் சென்று விட்டால் சம்பந்தப்பட்ட காவல் மாவட்ட ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி சென்னையில் தினமும் 3 முதல் 5 வாகனங்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையில் சென்னையில் ஆங்காங்கே ஏ.என்.பி.ஆர் எனப்படும் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னேசன் என்னும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT