Published : 26 Jun 2024 09:12 AM
Last Updated : 26 Jun 2024 09:12 AM

மறைமலை நகரில் ஐ.டி. ஊழியரை நண்பர்களே கொன்று ஏரிக்கரையில் புதைப்பு - 3 பேர் கைது

கோப்புப்படம்

மறைமலை நகர்: மறைமலை நகரில் நண்பர்களுக்கு ஏற்பட்ட மோதலில் ஐ.டி. ஊழியரை நண்பர்களே சேர்ந்து கொன்று ஏரிக்கரையில் உடலைப் புதைத்துள்ளனர். இன்று வட்டாட்சியர் முன்னிலையில் உடலை போலீஸார் மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் சீதக்காதி தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் விக்கி என்கிற விக்னேஷ் (27). விக்னேஷ், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 11-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்ற விக்னேஷ் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் விக்னேஷின் தந்தை தங்கராஜ் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது: மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த விசு என்கிற விஸ்வநாதன் (27), கோகுலாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (26) மற்றும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தில்கேஷ் குமார் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் நண்பன் விக்னேஷை மது அருந்துவதற்காக அழைத்துள்ளனர்.

மது போதையில் வாக்குவாதம்: அனைவரும் சேர்ந்து கோவிந்தாபுரம் ஏரியில் மது அருந்தியுள்ளனர். அப்போது விக்னேஷுக்கும் விசுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனால் ஆத்திரமடைந்த விசு வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து விக்னேஷை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்துள்ளார். விசு, தில்கேஷ்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து விக்னேஷின் உடலை ஏரியின் அருகிலேயே குழி தோண்டிப் புதைத்துள்ளது தெரியவந்தது.

விக்னேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசு, தில்கேஷ்குமார், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் மறைமலைநகர் போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து, மறைமலை நகர் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷின் உடல் நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x