Last Updated : 23 Jun, 2024 04:32 PM

 

Published : 23 Jun 2024 04:32 PM
Last Updated : 23 Jun 2024 04:32 PM

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் விவகாரம்: தனிப்படை அமைப்பு

போலி சான்றிதழ்

கடலூர்: சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்து விற்றதில் முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் கடந்த 17 ஆம் தேதி கோவிலாபூண்டி- மீதிகுடி கிராமப் பகுதி சாலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரளா மற்றும் கர்நாடகா பல்கலைக்கழகத்தின் போலிச் சான்றிதழ்கள் கிடந்தன. இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் கிள்ளை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி சாலையில் கிடந்த போலிச் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் தீட்சிதர்( 38), நாகப்பன் ( 45) ஆகிய இருவரையும் 18 ஆம் தேதி இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இதில் 3 பேர்களுக்கு மேல் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பீட்டர், பெங்களூரை சேர்ந்த கௌதமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சங்கர் தீட்சிதரின் அண்ணன் மனைவி அனுராதா, சிதம்பரத்தில் உள்ள வீட்டில் போலிச் சான்றிதழ்களை கம்ப்யூட்டர் மூலம் தயாரித்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தயார் செய்யப்பட்ட போலி சான்றிதழ் பார்சல் செய்யப்பட்டு சிதம்பரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பீட்டர் மூலம் ஆட்டோவில் சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் காரில் வந்து காத்திருக்கும் பெங்களூரைச் சேர்ந்த கௌதமனிடம் கொண்டு போய் சேர்த்ததும் அதன் பிறகு கௌதமன் அந்த போலி சான்றிதழ்களை பெங்களூருக்கு எடுத்துச் சென்று பல்வேறு நபர்களுக்கு அதிக அளவில் பணம் பெற்றுக் கொண்டு சான்றிதழ்களை வினியோகம் செய்தது தெரிய வந்ததுள்ளது.

மேலும் கைது செ ய்யப்பட்டுள்ள நாகப்பன், சங்கர் தீட்சிதர் ஆகியோரின் 6 வங்கிக் கணக்குகளில் கடந்த சில வருடங்களாக பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக பல வங்கியில் இருந்து பெறப்பட்ட 800 பக்கங்களுடைய பண பரிவர்த்தனை விவரங்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரின் 6 வங்கி கணக்குகளையும் முடக்கி வைக்க போலீஸார் வங்கிகளுன்னு கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் இந்த போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்த அனுராதாவிற்கு விசாரணைக்கு ஆஜர் ஆக போலீஸார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஆஜரானார். போலீஸார் அவரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, கூப்பிடும் போது வர வேண்டும் என்ற கண்டிஷனுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பெங்களூரில் வசிக்கும் கௌதமன், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பீட்டர் ஆகியோரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கிறது என்று போலீஸார் தெரிவித்துள்னர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x