Published : 20 Jun 2024 07:05 PM
Last Updated : 20 Jun 2024 07:05 PM

மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் - காட்பாடி சார் பதிவாளர் வீட்டில் ரூ.13.74 லட்சம் பறிமுதல்

சார் பதிவாளர் நித்யானந்தம்.

வேலூர்: காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் விடிய, விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சார் பதிவாளர் நித்யானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.74 லட்சம் ரொக்கப் பணம், 80 பவுன் தங்க நகைகள், முதலீடு பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக நித்யானந்தம் உள்ளார். இங்கு, வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் விஜய், தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7.45 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சோதனையின் போது புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

அந்த நேரத்திலும் சார் பதிவாளர் நித்யானந்தம் அலுவலக பணியில் ஈடுபட்டிருந்தார். போலீசார் சோதனை நடத்த தொடங்கிய நேரத்தில் மழையின் காரணமாக திடீரென மின் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரேட்டர் உதவியுடன் சோதனையை தொடர்ந்தனர். இந்த சோதனை இன்று (ஜூன் 20) அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது. இதில், அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் அலுவலக ஆவணங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 920 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிக்கிய திமுக புள்ளி: காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு இருந்தார். ரியல் எஸ்டேட் அதிபரான அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு அந்த நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் என்ன வேலை இருந்தது என்பது தொடர்பாக போலீசார் விரைவில் அவரிடம் விசாரிக்க உள்ளனர்.

சோதனை நடைபெற்ற மேல்வல்லத்தில் உள்ள சார் பதிவாளர் நித்யானந்தம் வீடு.

கவுன்சிலர் அன்புவுடன் வந்திருந்த ஜெயகர் என்பவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம், பாலாஜி என்பவரிடம் ரூ.5 ஆயிரம், ஜெயகர் என்பவரிடம் ரூ.6160 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.2.14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப் பட்டது தொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், சார் பதிவாளர் நித்யானந்தம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வீட்டில் சோதனை: காட்பாடி சார் பதிவாளர் நித்யானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் வேலூர் அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள மேல்வல்லத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜூன் 20) காலை 8 மணியளவில் சோதனை நடத்த தொடங்கினர். இந்த சோதனை இன்று மாலை 5 மணியளவில் முடிந்தது. இதில், ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப் பணம், 80 பவுன் தங்க நகைகள், வங்கி கணக்கு புத்தங்கள், எல்ஐசி மற்றும் மியூட்சுவல் பண்டு்களில் முதலீட்டு பத்திர ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.12 லட்சம் தொகையை வீட்டின் பின் பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்தார். அந்தப் பணத்தை காவல் துறை அதிகாரிகள் தோண்டி எடு்த்து மீட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x