Published : 20 Jun 2024 05:28 AM
Last Updated : 20 Jun 2024 05:28 AM

அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்ற 2 பேர் கைது

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சன்றிதழ் தயாரித்து, விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாணிக்கவாசகம், பிரிவு அலுவலர் சேகர் ஆகியோர்நேற்று முன்தினம் காலை கோவிலாம்பூண்டி எம்எம்ஐ நகரில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, பல்கலை. சான்றிதழ்கள் எம்எம்ஐ நகர் பாலம் அருகே கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் அங்கு சென்று பார்த்தபோது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிதம்பரம் ஏஎஸ்பிரகுபதிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார், போலி சான்றிதழ்களைக் கைப்பற்றினர். மேலும், ஒரு செல்போன் பில்லும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அந்த செல்போன் பில் சிதம்பரம் மன்மதசாமி நகர் சங்கர் தீட்சிதர் (37) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, சிதம்பரம் மீதிகுடி ரோடு கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த நாகப்பன் (50) என்பவருடன் சேர்ந்து, கம்ப்யூட்டர் மூலம் போலிச்சான்றிதழ் தயாரித்து வந்தது தெரியவந்தது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த நாகப்பன், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

போலீஸார் நாகப்பனிடம் விசாரித்ததில், சங்கர் தீட்சிதர் உதவியுடன் அண்ணாமலை பல்கலை. பெயரில் போலி சன்றிதழ்கள் தயாரித்து, பலருக்கும் விற்றதை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர்களது வீடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை போலீஸார் கைப்பற்றினர்.

இதுகுறித்து பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) ஏ.பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், சங்கர் தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர் இல்லை என்று கோயில் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x