Published : 19 Jun 2024 08:57 AM
Last Updated : 19 Jun 2024 08:57 AM
சென்னை: பெசன்ட் நகரில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக ஆந்திர மாநில எம்.பி. மகள் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பெசன்ட் நகர்கலாஷேத்ரா காலனி பகுதியில் நடைபாதையில் தூங்கினார்.
இந்நிலையில், அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் சூர்யா மீது ஏறி இறங்கியது. இதில், அவர் படுகாயம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய பயத்தில் காரை ஓட்டிய பெண் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காரில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய மக்களிடம் இறங்கி வந்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர், அவரும் அங்கிருந்து சென்றுள்ளார். இவ்விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னர்.
இதற்கிடையே சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய வாகன எண்ணை அடிப்படையாக வைத்து போலீஸார் துப்பு துலக்கினர். இதில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்.பி.யும், தொழில் அதிபருமான பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதிரி (32) என்பதும், சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் அவர், புதுச்சேரியில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.உயிரிழந்த இளைஞர், வீட்டில் கோபித்துக் கொண்டு சாலையோரம் தூங்கியபோது விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT