Published : 18 Jun 2024 06:35 AM
Last Updated : 18 Jun 2024 06:35 AM

‘சித்திரையில் பிறந்தது ஆபத்து’ என சிலர் கூறியதால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாத்தா கைது

வீரமுத்து

அரியலூர்: ‘சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆபத்து’ என சிலர் கூறியதால், பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா(21). இவருக்கும், கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(29) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சித்திரை மாதம் சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால், தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அதிகாலை குளியலறையில் வாளி தண்ணீரில் சங்கீதாவின் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸார் அங்கு சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றது, சங்கீதாவின் தந்தை வீரமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சங்கீதாவுக்கு சித்திரை மாதம் குழந்தை பிறந்துள்ளதால், தாய்வழி, தந்தைவழி என இரு குடும்பத்தினருக்கும் ஆகாது என்றும், பெற்றோர் அல்லது தாத்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வீரமுத்துவிடம் சிலர் கூறி உள்ளனர்.

வாக்குமூலம்: மேலும், மகளின் திருமணம், பிரசவம் என ஏற்கெனவே அதிக கடன் இருந்த நிலையில், இந்த குழந்தை இருந்தால் இன்னும் கூடுதல் கடன் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதியதால், குழந்தையை துணியில் சுற்றி வாளி தண்ணீரில் அழுத்தி கொன்றதாக வீரமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார் என தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை செய்தது எவ்வாறு என்பது குறித்து அவரது வீட்டில் வீரமுத்துவை நடிக்க வைத்து அதை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர், வீரமுத்துவை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x