Published : 17 Jun 2024 11:01 AM
Last Updated : 17 Jun 2024 11:01 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பரோலில் வந்த பிரபல ரவுடி தனது வீட்டை ரூ.48 லட்சத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து குடும்பத்தினருடன் மாயமான நிலையில், அவரை 3 தனிப்படைகள் அமைத்து 3 நாட்களாக போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கர்ணா. கடந்த 1997-ல் கொலை வழக்கில் கைதாகி 1999-ல் ஆயுள் தண்டனை பெற்றார்.இவரது மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் நன்னடத்தை மூலம் விடுதலை செய்ய கோரினார். ஆனால் புதுச்சேரி உள்துறை நிராகரித்தது. இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அடுத்த மாதம் தீர்ப்பு வரவுள்ளது. 20 ஆண்டுகள் சிறையில் உள்ள கர்ணா 33 முறை பரோலில் வந்துள்ளார்.
கடந்த 11-ம் தேதி அவர் தனது மனைவி உடல் நலம் சரியில்லாததால் சிறையிலிருந்து 3 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அவரது பரோல் முடிவடைந்தது. ஆனால் அவர் காலாப்பட்டு சிறைக்கு திரும்பவில்லை.
இதுபற்றி சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் முதலியார்பேட்டை போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
அதன்பேரில் முதலியார்பேட்டை போலீஸார் கர்ணா வீட்டு்க்கு சென்று பார்த்தனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஐபிசி 224ன் (கைதி மாயம்) கீழ் வழக்குப் பதிவு செய்தார்.
பரோலில் வந்த ரவுடி கர்ணா, அவரது மனைவி, அவரது இரண்டு மகள்கள், மருமகன், மகன் மற்றும் மருமகள், தம்பி பாஸ்கர் அவரது குடும்பத்தினர் என யாருமே வீட்டில் இல்லை. இதையடுத்து எஸ்பி பக்தவத்சலம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருகிறது.
இதுபற்றி காவல்துறை உயர் வட்டாரங்களில் விசாரித்த போது, “நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த கர்ணா மீது பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகள் மட்டுமின்றி சிறையில் இருந்தபடியே, கொலைமுயற்சி, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பது என பலவற்றை தொடர்ந்ததால் வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறையிலிருந்து விடுதலை கிடைக்காததால் பல மாதங்களுக்கு முன்பு தலைமறைவாக தனது குடும்பத்துடன் திட்டமிட்டுள்ளார்.
இத்திட்டத்தில் அவருக்கு முழு உதவியும் கர்ணாவின் மகன் விக்ரம் செய்துள்ளார். இவர் முக்கியக்கட்சியில் உறுப்பினராக உள்ளார் என்று தெரிகிறது. முதலில் தனதுவீட்டை விக்ரம் தனது நண்பர் சசிதரன் பெயருக்கு மாற்றியுள்ளார். அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து ரூ. 48 லட்சம் பெற்று தந்துள்ளார்.
மேலும் பலரிடம் பணம் வசூலித்துள்ளனர். பரோலில் கர்ணா வந்த பிறகு, மயிலம் கோயிலுக்கு சென்று கர்ணா மொட்டை அடித்தார். திருப்பதி செல்வதாகக்கூறி தங்களுக்கு தெரிந்தோரிடம் கர்ணா குடும்பத்தினர் புறப்பட்டனர். அனைவரையும் திசை திருப்பவே திருப்பதி கோயிலுக்கு செல்வதாக திசைத்திருப்பி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர். கர்ணா, விக்ரமின் நண்பர்கள் பலரும் போலீஸார் கட்டுப்பாட்டில் உள்ளனர். தொடர்ந்து தேடி வருகிறோம்” என்றனர்.
இதுபற்றி வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகையில், “பரோலில் இருந்த கைதியை போலீஸார் கண்காணிக்க வேண்டும். ஆனால் முதலியார்பேட்டை போலீஸார் கண்காணிக்கவில்லை. முக்கிய கைதியை கண்காணிக்க போலீஸார் தவறியுள்ளனர். இதன்மூலம் சிறையில் உள்ளோருக்கு முக்கியமான நேரங்களில் பரோல் கிடைப்பதில் சிக்கல் உருவாகும்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT