Published : 14 Jun 2024 03:33 PM
Last Updated : 14 Jun 2024 03:33 PM
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபாதை கடையில் கஞ்சா வியாபராம் செய்த வியாபாரியை கைது செய்த போலீஸார், அந்தக் கடையை அகற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல் பங்க் எதிரே நடைபாதையில் உள்ள ஒரு பழக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்தக் கடையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபாதை கடை வியாபாரி சாகுல் அமீது (55) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவருக்கு கஞ்சா விற்பனை செய்த வடவயலைச் சேர்ந்த பிஜூ (47) என்பவரையும் கைது செய்தனர். நடைபாதை கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கூடலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதையில் கடைகள் நடத்த மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்திருந்த போக்குவரத்துப் போலீஸார், தங்களின் நம்பிக்கைக்கு எதிராக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த சாகுல் அமீதின் கடையை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் நடைபாதை கடை வியாபாரிகள் வேறு யாரும் ஈடுபட்டாலும் அவர்களது கடைகள் உடனடியாக அகற்றப்படும் என நடைபாதை வியாபாரிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT