Published : 11 Jun 2024 07:33 PM
Last Updated : 11 Jun 2024 07:33 PM
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், ஆதீனத்தின் உதவியாளராக இருந்த செந்தில் தனிப்படை போலீஸாரால் வாராணசியில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்பான ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், ஆடுதுறை வினோத், மடாதிபதியின் நேர்முக உதவியாளர் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செந்தில், திருவெண்காடு சம்பாகட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், அகோரம், குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இதனிடையே ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளராக இருந்த செந்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக, ஆதீன மடத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் கோரி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு நேற்று (ஜூன் 10) தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் செந்தில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற மயிலாடுதுறை தனிப்படை போலீஸார் நேற்று (ஜூன் 10) இரவு செந்திலை கைது செய்தனர். தொடர்ந்து செந்திலை விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை பெங்களூரு கொண்டு வந்து, அங்கிருந்து மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT