Published : 02 Jun 2024 12:58 PM
Last Updated : 02 Jun 2024 12:58 PM
சென்னை: இளம் பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் எஸ்ஐயை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் குமரப்பா, தெருவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி கொரியர் நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். கடந்த 27ம் தேதி காலை செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை போலீஸ் எஸ்ஐ என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
உங்கள் ஆபாச படம் இணையதளத்தில் பரவி வருகிறது. அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் ரூபாய் 10 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளார். பயந்து போன அப்பெண் போலீஸ் என கூறிய அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூபாய் 6,500 அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் மன்னார்குடியில் வசிக்கும் இளம் பெண்ணின் தந்தையை, எஸ்ஐ என அறிமுகப்படுத்திக் கொண்ட அதே நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை பற்றி தவறாக கூறியுள்ளார். மேலும் உங்கள் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை, வீடியோவை இணையதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூபாய் ஒரு லட்சம் தர வேண்டும் என மிரட்டி உள்ளார். இல்லையென்றால் அது உலகம் முழுவதும் பரவி உங்கள் மானமே போய்விடும் என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக இளம் பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை அணுகிய போதுதான் மர்ம நபர் போலீஸ் எஸ்ஐ இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இளம் பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் எஸ்ஐ என மிரட்டிய மர்ம நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT