Published : 31 May 2024 03:10 PM
Last Updated : 31 May 2024 03:10 PM

சினிமா பாணியில் மலக்குடலில் 1 கிலோ தங்கம் கடத்தல்: விமான பணிப்பெண் கைது @ கேரளா

கண்ணூர்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூருக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானப் பணிப்பெண் சுமார் 1 கிலோ தங்கத்தை மலக்குடலில் கடத்தி வந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

கடந்த 28-ம் தேதி இந்த விமானம் இந்தியா வந்தது. வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு வந்த தகவலின் அடிப்படையில் விமானப் பணிப்பெண் சுரபி வசம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் 960 கிராம் தங்கம் கடத்தி வந்தது உறுதியானது.

விமானப் பணிப்பெண் சுரபி கொல்கத்தாவை சேர்ந்தவர். அவரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பும் இதே போல தங்கக் கடத்தலில் அவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விமான நிறுவன ஊழியர் ஒருவர் மலக்குடலில் தங்கம் கடத்தி வந்து, கைதாகி உள்ளது இதுவே முதல் முறை. இந்தியாவில் தினந்தோறும் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் வசம் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த சோதனையில் தங்கத்தை கடத்தி வருபவர்கள் புலனாய்வு பிரிவு அதிகார்கள் கையும் களவுமாக பிடித்து கைது செய்வது வழக்கம்.

இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ‘க்ரூ’ பாலிவுட் திரைப்படத்தின் கதை போல இருப்பதாக பலரும் சொல்லி வருகின்றனர். அதில் விமானப் பணிப்பெண்களாக நடித்த கரீனா கபூர், தபு மற்றும் கிரித்தி சோனன் உள்ளிட்டோர் பணத்துக்காக தங்கத்தை கடத்தி வருவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x