Published : 31 May 2024 05:49 AM
Last Updated : 31 May 2024 05:49 AM
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் விலக்குப் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ் (26), பெர்லின் (24), கஜேந்திரா (22) மற்றும் மரிய சுந்தரம் மகன் நவீன் (27) என்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கிவைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மகேஷின் சகோதரர் கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் காவல் நிலையத்துக்குச் சென்று, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே தலைமைக் காவலர்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்யாணசுந்தரம், அவரது நண்பர் நிர்மல்குமார் ஆகியோர், தலைமைக் காவலர்களிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்ட முயன்றனர். தலைமைக் காவலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
எனினும், அவர்களை துரத்திச் சென்ற கல்யாணசுந்தரம் அரிவாளால் வெட்டியதில், தங்கதுரைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கல்யாணசுந்தரம் மற்றும் நிர்மல்குமாரைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT