Published : 30 May 2024 05:39 AM
Last Updated : 30 May 2024 05:39 AM

கோவை தனியார் மருத்துவமனையில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

ராஜன்

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனை துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அவிநாசி சாலையில்செயல்படும் தனியார் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை அடிக்கடி திருடுபோனது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி மருத்துவமனைக்கு ஒரு வேலைக்காக வந்த, காந்தி மாநகரைச் சேர்ந்த ராஜன்(38) உள்ளிட்ட இருவரை, அங்குள்ள இரும்பு பொருட்களை திருட முயன்றதாகக் கூறி, மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாவலர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ராஜனுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு போலீஸார் ராஜன் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். உயிரிழந்த ராஜனுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தொடர் விசாரணையில், மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாவலாளிகள் இணைந்து ராஜனைத் தாக்கியதும், அதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கொலை, கூட்டுசதி, தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் (47), மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார்(37), தகவல் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் (36), செயலாக்கப் பிரிவு அலுவலர் சரவணகுமார்(34), பிளம்பர் சுரேஷ், ஊழியர் சரவணகுமார், பாதுகாவலர் மணிகண்டன், கிடங்கு மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, ராஜன் கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனை பெயரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள், கோவை அரசு மருத்துவமனை அருகில் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்த பின்னர், அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, ‘‘இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராஜனுடன் சென்ற மற்றொருவர் யார், அவரது நிலை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x