Published : 29 May 2024 01:19 PM
Last Updated : 29 May 2024 01:19 PM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக ஒரு நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் கனரா வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் அடித்துள்ளது. அந்த அலாரம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருந்ததால், போலீஸார் உஷாரானார்கள். உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸாரை ஏடிஎம் மையத்துக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்பாகம் காவல் நிலைய காவலர் முன்னா, அந்த ஏடிஎம் மையத்துக்கு விரைந்து சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மர்ம நபர் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பிடிக்க முயன்ற காவலர் முன்னாவை கத்தியால் குத்திவிட்டு அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவலரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், காயம் அடைந்த காவலர் முன்னா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிடிபட்ட நபரிடம் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT