Published : 28 May 2024 04:34 PM
Last Updated : 28 May 2024 04:34 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில், பயன்படுத்தப்படாத கழிவறைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி அருகேவுள்ள நாங்கூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கேசவன் (49) என்பவர், அருகில் உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப் பட்டுள்ளது. வீட்டின் அருகே கழிவறைத் தொட்டி கட்டப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (மே 27) மாலை அப்பகுதியில் சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, கழிவறைத் தொட்டி அருகே பந்து விழுந்துள்ளது.
சிறுவர்கள் பந்தை தேடியபோது கழிவறைத் தொட்டி மூடியை அகற்றிப் பார்துள்ளனர். அப்போது அதனுள்ளே சிதைந்த நிலையில் மனித எலும்புக் கூடுகள், அவற்றின் அருகே புடவை, ஜாக்கெட் உள்ளிட்டவை கிடந்துள்ளன. இது குறித்து தகவலறிந்த பாகசாலை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தஞ்சாவூர் தடய அறிவியல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, எலும்புகளை சேகரித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், டிஎன்ஏ பரி சோதனைக்காக எலும்புகள் சென்னைக்கு அனுப்பப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இது தொடர்பாக பாகசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கேசவனின் தாயார் மணிக்கொடியை (65) கடந்த 2 ஆண்டுகளாக காணவில்லை எனவும், இது தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT