Published : 27 May 2024 04:44 AM
Last Updated : 27 May 2024 04:44 AM
கொல்கத்தா: ரூ.80 கோடி தங்க கடத்தல் விவகாரம் காரணமாக வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனார் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக்கை சேர்ந்த எம்.பி. அன்வருல் அசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்தார். அதற்கு அடுத்தநாள் முதல் அவரை காணவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில், வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனார் கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாய்களில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸாரும் வங்கதேசத்தை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தியபோது, கொலைக்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனாரும், அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேச தொழிலதிபர் முகமது அக்தர் உஸ்மானும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து துபாயில் இருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு பெருமளவில் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். கடத்தலில் கிடைக்கும் பணத்தை பங்கிடுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக எம்.பி. அன்வருல் அசிம் அனார் தனியாக தங்க கடத்தல் தொழிலை மேற்கொண்டு வந்திருக்கிறார். அண்மையில் அவர் ரூ.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தினார். இதையறிந்த அவரது முன்னாள் நண்பரான அமெரிக்க தொழிலதிபர் முகமது அக்தர் உஸ்மான், எம்.பி. அன்வருல் அசிம் அனாரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார். இதன்படி உஸ்மானின் காதலி ஷிலாந்தி, கூட்டாளி அமானுல்லா ஆகியோர் அண்மையில் கொல்கத்தாவுக்கு வந்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர். அவர்களது ஏற்பாட்டின் பேரில் மும்பையில் உள்ள இறைச்சி கடையில் பணியாற்றிய வங்கதேச தொழிலாளி ஜிஹாத் ஹவால்தாரும் கொல்கத்தாவுக்கு வந்தார்.
இதற்கிடையில் அன்வருல் அசிம் அனாரை தனிமையில் சந்தித்த ஷிலாந்தி, அவரை தனது காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் அனாரை, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு அனார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்கத்தாவின் பல்வேறு கால்வாய்களில் வீசப்பட்டன. பின்னர் ஷிலாந்தியும் அமானுல்லாவும் வங்கதேசத்துக்கு திரும்பிச் சென்றுவிட்டனர். இறைச்சி கடை தொழிலாளி ஜிஹாத் ஹவால்தார் மும்பைக்கு சென்றுவிட்டார். அனாரை கொலை செய்ய மூவருக்கும் ரூ.5 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
காதலி உட்பட 3 பேர் கைது: தீவிர விசாரணையின் பலனாக, ஜிஹாத் ஹவால்தாரை கொல்கத்தா போலீஸார் அண்மையில் கைது செய்தனர். ஷிலாந்தி, அமானுல்லாவை வங்கதேச போலீஸார் கைது செய்து 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேச தொழிலதிபர் முகமது அக்தர் உஸ்மானை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச போலீஸான இன்டர்போலின் உதவியை வங்கதேச போலீஸார் நாடியுள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகு மேலும் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT