Published : 25 May 2024 05:37 AM
Last Updated : 25 May 2024 05:37 AM

கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. படுகொலை செய்யப்பட்ட வழக்கு: உடலை வெட்டி பல இடங்களில் வீசியதாக தகவல்

வங்கதேச எம்.பி. அன்வருல் அசீம் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். படம்: பிடிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி.படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது உடலில் இருந்த தோலை உரித்தெடுத்து பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு, வங்கதேசத்தில் இருந்து ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான அன்வருல் அசீம் அனார் (வயது 56) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி வந்தார். ஆனால் 13-ம் தேதியிலிருந்து அவரைக் காணவில்லை.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கொல்கத்தாவின் நியூடவுனிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை மேற்கு வங்க போலீஸாருடன் இணைந்து வங்கதேச அரசும் விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக மேற்கு வங்க சிஐடி போலீஸ் ஐ.ஜி. அகிலேஷ் சதுர்வேதி கூறும்போது, "இது திட்டமிடப்பட்ட படுகொலையாகும். எம்.பி. அன்வருல் அசீமின் பழைய நண்பர் அக்தருஸ்ஸாமான் அவரை கொல்வதற்காக ரூ.5 கோடி கொடுத்துள்ளார். எம்பியின் நண்பர் அக்தருஸ்ஸாமான் அமெரிக்காவை சேர்ந்தவர். கொல்கத்தாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருக்கிறார். அதில்தான் எம்.பி.அன்வருல் தங்கியிருந்தார். அந்தக் குடியிருப்பில் ரத்தக்கறை உள்ளது.

மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளாஸ்டிக் கவர்கள் கிடந்தன. கொலையாளிகள் முதலில் எம்.பி.யின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடலில் இருந்து தோலை உரித்தெடுத்துள்ளனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் கட்டிவைத்து பல இடங்களில் குற்றவாளிகள் வீசி எறிந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதுதவிர அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள பிரிட்ஜில் சில உடல் பாகங்களை வைத்துள்ளனர். அதனை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். முழு உடலும் கிடைக்கவில்லை. தடயவியல் குழு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. விரைவில் முழு உண்மையும் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் எம்.பி. அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாட்களில் எம்.பி.யை தவிர மற்றவர்கள் அடுத்தடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

இந்த கொலையை செய்தவர்களில் ஒருவரான ஜிஹாத் ஹவ்லதார் என்பவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் அங்குள்ள இறைச்சிக் கடையில் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. ஜிஹாத் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் எம்.பி.யின் நண்பர் இவருக்கு ரூ.5 கோடி பணம் கொடுத்து கொலைக்காக கொல்கத்தாவுக்கு வரவழைத்துள்ளார். இக்கொலை தொடர்பாக ஜிஹாத் ஹவ்லதாரை போலீஸார் கைது செய்து வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஜிஹாத், சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்ததும், கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு அவர் அழைத்து வரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு அன்வருலை அழைத்து வர அவரது நண்பர், ஷிலாந்தி என்ற பெண்ணை பயன்படுத்தியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பெண் ஷிலாந்தி, வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் முக்கிய குற்றவாளியான எம்.பி.யின் நண்பரின் காதலி என்பதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x