Published : 21 May 2024 12:27 PM
Last Updated : 21 May 2024 12:27 PM
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்கநகை, ஆபரணங்கள் அடங்கிய பையை திருடிய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(37). இவர் கடந்த 18-ம் தேதி உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தார். அங்கு காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த அவர், தங்கநகை, ஆபரணங்கள் அடங்கிய பையை தனது அருகில் கீழே வைத்திருந்தார். அவருக்கு பின்னால், இருவர் அமர்ந்திருந்தனர்.
சிறிதுநேரத்தில் தனலட்சுமி தனது உறவினரை பார்க்க எழுந்தபோது, கீழே வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. அக்கம் பக்கமெல்லாம் தேடியும் அந்தப் பை கிடைக்கவில்லை. அந்த பையில் ஒரு கிராம் தங்க நகை, 4 கிராம் கம்மல், இரண்டு ஜோடி கொலுசு வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம்.
இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் தனலட்சுமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சென்ட்ரல் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் வழக்குப்பதிந்தார். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார், குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
முதலில், ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில், தனலட்சுமியின் பையை இருவர் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் மூர்மார்க்கெட் வளாகத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில், ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த பீர்முகம்மது(47), பெருங்களத்தூரைச் சேர்நத் ரவி(63) என்பதும், இவர்கள் தான் தனலட்சுமியின் பையை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து தனலட்சுமியின் தங்கநகை மற்றும் ஆபரணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT