Published : 19 May 2024 07:10 PM
Last Updated : 19 May 2024 07:10 PM
மேட்டூர்: எடப்பாடி அருகே இருப்பாளியில் மதுபோதையில் சண்டை போட்ட தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (48), இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு ஜெயசுதா (23) என்ற மகளும், தாமரைச்செல்வன் (22) என்ற மகனும் உள்ளனர். தாமரைச்செல்வன் எடப்பாடி அருகே இருப்பாளி அடுத்த வேப்பமரத்தூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி இருந்து வெல்டிங் மற்றும் ஆடு அறுக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேச்சேரியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரன், தனலட்சுமி, ஜெயசுதா ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்பாளியில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தாமரைச்செல்வன் வேலைக்கு சென்று விட்டு இருப்பாளியில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்த போது, மதுபோதையில் இருந்த அவரது பெற்றோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த தாமரை செல்வன் அவர்களை கண்டித்துள்ளார். பின்னர், மது அருந்த வேண்டாம் என தாமரைச்செல்வன் தெரிவித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் விட்டின் வாசலில் அமர்ந்து குடித்து, சண்டை போடுவதால், தன்னை அவமானப்படுத்துவதாக கூறி கண்டித்துள்ளார்.
பின்னர், ஆத்திரமடைந்த தாமரைசெல்வன், அருகில் இருந்த ஆடு அறுக்கும் கத்தியை எடுத்து போதையில் இருந்த தாய் லட்சுமி கழுத்தை அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். பின்னர் தந்தை வெங்கடேஸ்வரனை, தாக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார். அவரை துரத்திச் சென்று கத்தியால் வெட்டியதில் வெங்கடேஸ்வரன் காயமடைந்தார். பின்னர், வீட்டின் அருகில் இருந்தவர்கள் தனலட்சுமியை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாமரைச்செல்வனை மக்கள் மடக்கிப் பிடித்து அடைத்து வைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து தாமரைசெல்வனை கைது செய்தனர். பின்னர், வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், பூலாம்பட்டி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து தாமரைச்செல்வனை சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT