Published : 17 May 2024 10:45 AM
Last Updated : 17 May 2024 10:45 AM
சென்னை: சென்னை தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடியை திறந்து உதவி கேட்டு சிறுமி கூக்குரல் எழுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தி.நகரில் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பசுல்லா சாலை சிக்னலில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி சில்வர் கலர் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்புவதாகவும் நேரில் பார்த்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ஆல்டர் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டார். அதில், சம்பந்தப்பட்ட வாகனம் சாலிகிராமம் நவநீதம்மாள் தெருவில் நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து காரின் உரிமையாளரான மகேந்திரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை பற்றி போலீஸார் கூறுகையில், “மகேந்திரன் சகோதரரின் 15 வயது மகள் 10 - ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அதனை கொண்டாடும் விதமாக சிறுமியுடன் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜூஸ் கடைக்கு 2 காரில் சென்றனர். அங்கு ஜூஸ் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது சிறுமியை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி காரில் உள்ள அனைவரும் கேலி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த சிறுமி கேலி செய்வதை நிறுத்துவதற்காக வேடிக்கையாக உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள், இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக தவறாக நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்” என்றனர்.
விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்ததை அடுத்து காவல் உதவி ஆணையர் ஆல்டர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT