Published : 15 May 2024 04:04 PM
Last Updated : 15 May 2024 04:04 PM
திருநெல்வேலி: சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து ஒன்றில், துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து திருச்சி, மதுரை, கோவில்பட்டி வழியாக இன்று காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், அந்தப் பேருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, பணிமனை ஊழியர்கள், வழக்கமாக பேருந்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் ஒரு துப்பாக்கி மற்றும் அரிவாள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பணிமனை மேலாளர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து, அங்கு வந்த பாளையங்கோட்டை போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.மேலும், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர்.
இந்த விசாரணையில், பேருந்தின் 9-ம் நம்பர் இருக்கையின் அருகே இந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரித்தனர். 9-ம் நம்பர் இருக்கையில் பயணித்த பயணியின் விவரங்களை சேகரித்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT