Published : 14 May 2024 05:13 AM
Last Updated : 14 May 2024 05:13 AM
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரை அடுத்த நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன்(30). விவசாயம் செய்து வந்த இவர், நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். திமுகவில்திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பதவிவகித்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ க.சொ.க.கண்ணனின் அக்காள் மகன்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாகக் கூறிவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு நீண்டநேரம்ஆகியும் அவர் வீடு திரும்பாததால், நள்ளிரவு 12 மணியளவில் அவரைத் தேடி குடும்பத்தினர் வயலுக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பம்பு செட் அருகில்தலை, கழுத்து, கை உள்ளிட்டஇடங்களில் பலத்த காயங்களுடன் கலைவாணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பந்தநல்லூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத், பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, அங்கு சில வாகனங்கள் வந்துசென்ற தடயங்கள் இருந்ததால், அவற்றில் வந்த கும்பல், கலைவாணனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
துண்டுச்சீட்டில் வாசகம்: கடந்த 2 மாதங்களுக்கு முன்இப்பகுதியில் வைக்கோல் போர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிந்தன. நெய்குன்னம் கிராமத்தில் தீ வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போருக்கு அருகில் ‘தொடரும்’ என எழுதியிருந்தது.
மேலும், கலைவாணன் வீட்டுக்கு அருகில் ஒரு துண்டுச் சீட்டும் கிடந்தது. அதில், ‘தொடரும், மகேஸ்,கலைவாணன் உயிரா, பொருளாஅடுத்தது’ என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் போலீஸில் கலைவாணன் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
எனவே, அவர்களுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, அந்த கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT