Published : 12 May 2024 03:48 PM
Last Updated : 12 May 2024 03:48 PM
சென்னை: சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் காரை ஓட்டியதால், விபத்து நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் கைதான பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக்நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் சரிதா. இவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக, சரிதாவின் உறவினர்கள் பலர் வந்திருந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக நிகழ்ச்சிக்காக வந்தவர்கள், வீட்டின் சாலையில் படுத்து உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில், அவ்வழியே வந்த மகராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று, வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த உறவினர்களின் கால்களின் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்த சாலை ஒரு முட்டுச் சந்து என்பது தெரியாமல், காரை அவ்வழியே தாறுமாறாக ஓட்டி வந்த வடமாநில பெண்ணை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சரிதா மற்றும் பிள்ளை நாயகி என்ற இரு பெண்களின் கால் எலும்புகள் உடைந்து போனதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண், மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது பெண் வைஷாலி என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ள, வைஷாலி கூகுள் மேப் காட்டிய பாதையில் காரை ஓட்டி வந்ததாகவும், அது குறுகலான பாதை என்பது தனக்கு தெரியாது என்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில், வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT