Published : 12 May 2024 04:58 AM
Last Updated : 12 May 2024 04:58 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெண்ணைக் கொன்று, அவரது உடலைப் புதைக்க திட்டமிட்ட இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அருண் ஸ்டாலின் மனைவி பிரின்ஸி (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்தார். அதே ஆலையில் பணிபுரிந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த திவாகர் (27) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே, நகை வேண்டும், பணம் வேண்டும் என்று திவாகரை அவ்வப்போது பிரின்ஸி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்ய திவாகர் திட்டமிட்டு, தனது உறவினரான இந்திரகுமார் (31) என்பவரை காரில் பல்லடம் வருமாறு அழைத்தார்.
நேற்று முன்தினம் இரவு பிரின்ஸியை வரவழைத்த திவாகர், அவரை காரில் ஏற்றிச்சென்று, கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலைப் புதைக்கத் திட்டமிட்டு, மதுரையை நோக்கி காரில் இந்திரகுமாரும், பைக்கில் திவாகரும் வந்துள்ளனர்.
இடம் தேடும்போது... திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி பிரிவு வந்ததும், சாலையோரம் கார் மற்றும் பைக்கை நிறுத்திவிட்டு, உடலைப் புதைப்பதற்கு இடம் தேடியுள்ளனர். அப்போது, அங்கு வந்த மதுரை நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் சந்தேகமடைந்து, காரை சோதனையிட்டனர்.
அதில் பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, இந்திரகுமார், திவாகர் ஆகியோர் தப்பியோட முயன்றனர். ஆனால், போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். பின்னர், திண்டுக்கல் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணைக் கொலை செய்து, உடலை புதைக்கத் திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீஸார், பெண்ணின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து கார், பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT