Published : 10 May 2024 04:08 AM
Last Updated : 10 May 2024 04:08 AM
ராமேசுவரம்: ராமேசுவரம் கோதண்டராமர் கோயில் கடற்கரையில் பவளப்பாறைகளை தண்ணீரில் மிதக்கவிட்டு, ‘ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல்' என பக்தர்களை ஏமாற்றி, வசூல்வேட்டை நடத்த பயன்படுத்தப்பட்ட போலி வழிபாட்டுத் தலத்தை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
ராமேசுவரம் தீவை சுற்றிலும் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக கடல் பிராந்தியத்தில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளப்பாறைகள் பல அரியவகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன. பவளப்பாறையை கடலில் இருந்து வெளியே கொண்டு வந்ததும் அது உயிரிழந்துவிடும். பின்னர் அது உலர்ந்ததும் தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்றுவிடும். இவற்றைக் கொண்டு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதுடன், வெட்டி எடுத்து விற்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கின.
எனவே,அவற்றை பாதுகாக்கும் பொருட்டு, பவளப்பாறைகளை கடலில் இருந்து வெட்டி எடுப்பதற்கு தடை விதித்ததுடன், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ராமேசுவரம் கோதண்டராமர் கோயில் கடற்கரையில், சிலர் கிணறு வடிவில் தொட்டி அமைத்து அதில் பவளப்பாறைகளை மிதக்கவிட்டு, 'ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல்' எனவும், அதன் அருகில் சிவலிங்கம் மற்றும் நந்தியை நிறுவி வழிபாட்டுத்தலம் ஒன்றையும் ஏற்படுத்தினர். இதன் மூலம் கோதண்டராமர் கடற்கரைக்கு வரும் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தினர்.
இது குறித்து ராமேசுவரம் ராமநாத சுவாமி நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வருவாய்த் துறையினர் நேற்று கோதண்டராமர் கோயில் கடற்கரையில் போலியான வழிபாட்டுத் தலத்தை அகற்றினர். மேலும், அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலை, பவளப்பாறை ஆகியவற்றை ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT