Published : 07 May 2024 05:59 AM
Last Updated : 07 May 2024 05:59 AM

ஜெயக்குமார் கொலையில் திருப்பம்: முன்னாள் மத்திய அமைச்சரிடம் தனிப்படையினர் விசாரணை

கேபிகே. ஜெயக்குமார்

திருநெல்வேலி: திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கொலை தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். கடந்த 2-ம் தேதி மாலையில் ஜெயக்குமார் தனது வீட்டிலிருந்து காரில் தனியாகச் சென்றது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. மாயமான அவரது செல்போன்களை கண்டறியவும் போலீஸார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச் சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல் வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 4-ம் தேதி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

8 தனிப்படைகள் விசாரணை: மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு, அவர் திருநெல்வேலி எஸ்.பிக்கு எழுதிய கடிதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக மருமகனுக்கு எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில், நாங்குநேரி தொகுதிகாங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக் குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு 15 தினங்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி ஆதித்தனிடம்... இந்நிலையில், பாளையங் கோட்டை ஜோதிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் மத்திய இணைஅமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்வீட்டுக்கு பணகுடி காவல் ஆய்வாளர் ஆனி குமார் தலைமையி லான தனிப்படை போலீஸார் நேற்று சென்று விசாரணை நடத் தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், தனுஷ் கோடி ஆதித்தன், ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் குறித்தும், இதற்கு உதவியாக இருந்த தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தெரிந்த நபரான திருநெல்வேலி பாலபாக்யா நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடமும் போலீஸார்விசாரணை நடத்தி, அதன் விவரங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து, இருவரிடமும் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுபோல் இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

செல்போன்கள் கிடைக்கவில்லை: ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதிமாலையில் தனது வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது, அவர் தனது 2 செல்போன்களையும் கொண்டு சென்றுள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பாத நிலையில் அவர் இறந்து கிடந்த தோட்டத்துக்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீஸார் கைப்பற்றினர். ஆனால், அவரது செல்போன்கள் இதுவரை கிடைக்கவில்லை.

அவை சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கண்டறிந்தால் அதில் உள்ள அழைப்புகளைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று தனிப்படை போலீஸார் கருதுகின்றனர். எனவே, செல்போன் களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காரில் தனியாக பயணம்: ஜெயக்குமார் வீட்டின் பின்பகுதியில் தோட்டத்துக்குச் செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. இதனால், யாரேனும் அதை திட்டமிட்டு பழுதாக்கி னார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக, தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு அல்லது 3-ம் தேதி அதிகாலை இறந்திருக்கலாம் என்று தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2-ம் தேதி மாலையில் வீட்டில் இருந்து காரில் அவர் புறப்பட்டு எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இதற்காக திசையன்விளை, உவரி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திசையன்விளை பஜார் பகுதியில் ஒரு கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்தபோது கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் திசையன்விளை சந்திப்பு பகுதியில் இருந்து அவர் தனது சொந்த ஊருக்கு தனியாக காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது.

கே.எஸ்.அழகிரி கருத்து: இந்நிலையில், கரைசுத்துபுதூர் கிராமத்துக்குச் சென்று ஜெயக்குமார் குடும்பத்துக்கு ஆறுதல்கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜெயக்குமாரின் கடிதத்தில் பெயர் உள்ளவர்களுடன் ஜெயக்குமாருக்கு எப்படிப்பட்ட நட்பு இருந்தது என்பது எனக்கு முழுமையாக தெரியாது. மிகவும்கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை போலீஸார்தான் கண்டறிய வேண்டும். விரைவில்தகவல் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்பது எனது நம்பிக்கை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x