Published : 04 May 2024 03:00 PM
Last Updated : 04 May 2024 03:00 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை அருகே 950 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீஸர் வெள்ளிக்கிழமை இரவு ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கணபதிப்பாளையம் டிஎஸ்ஏ களம் பகுதியில் வசித்து வரும் தளபதி என்பவரது தோட்டத்து வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு, ஜெலட்டின் குச்சிகள், வெடிக்க வைக்க பயன்படுத்தும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிப்பொருட்கள், வயர்கள், பேட்டரி ஆகியவற்றை பாறைகளை உடைக்க பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அனுமதி பெறாமல் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பொள்ளாச்சி அடுத்த அகிலாண்டபுரத்தை சேர்ந்த ராமசாமியின் (50) கம்பரசர் டிராக்டர் மூலம் குழி தோண்டியதாகவும், வயர்கள் மற்றும் வெடிமருந்துகளை புதைக்க அவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து 950 ஜெலட்டின் குச்சிகள், எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், டிராக்டர் மற்றும் கம்பரசர் பேட்டரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதி இன்றி வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த தளபதி மற்றும் வெடி பொருட்களை வெடிக்க வைக்க உதவிய ராமசாமி ஆகியோரை ஆனைமலை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT