Published : 30 Apr 2024 08:29 PM
Last Updated : 30 Apr 2024 08:29 PM
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக எஸ்டேட் ஊழியர் உட்பட 4 பேரிடம் ஒரே சமயத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் (50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில், நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தற்போது இவ்வழக்கை கோவை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியோர், தொடர்புடையவர்கள் என ஐம்பத்துக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து போலீஸார் விசாரித்துள்ளனர். இதனிடையே, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் பாதுகாப்பு பணி உள்ளிட்ட காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து தற்போது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக பணியாற்றி வரும் கோத்தகிரியைச் சேர்ந்த ரமேஷ், கோத்தகிரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தேவன், கோவை செளரிபாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவிக்குமார், கோவை காந்திபுரத்தில் நம்பர் பிளேட் வடிவமைப்பு தொழில் செய்து வரும் அப்துல்காதர் ஆகியோருக்கு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று (30-ம் தேதி) ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, மேற்கண்ட நால்வரும், காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை, மாலை வரை நடைபெற்றது. கோடநாடு கொள்ளை, கொலை சம்பவம் தொடர்பாகவும், எஸ்டேட்டுக்கு வந்து செல்லும் நபர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்தும் ஓட்டுநர் ரமேஷ், வியாபாரி தேவன் உள்ளிட்டோரிடமும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கில் கைதான சயானின் உறவினர் வீடு கோவை செளரிபாளையத்தில் உள்ளது. அங்கு தங்கியிருந்த போது, சயானின் நடவடிக்கைகள் என்ன, அவரை வந்து சந்தித்துச் சென்ற நபர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் குறித்து ரவிக்குமாரிடமும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபோது கைதானவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் நம்பர் பிளேட் வடிவமைப்பு தொடர்பாக நம்பர் பிளேட் வடிவமைப்பாளரிடமும் போலீஸார் விசாரித்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT