Published : 29 Apr 2024 08:46 PM
Last Updated : 29 Apr 2024 08:46 PM

சென்னையில் பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - இளைஞர் கைது

சென்னை: சென்னையில் பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், செல்போன், ஸ்வைபிங் மெஷின் மற்றும் 64 ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியது: சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவில் வசிப்பவர் கார்த்திக்வேந்தன். இவரது ஏடிஎம் கார்ட் கடந்த மார்ச் 31ம் தேதியன்று தொலைந்து போயுள்ளது. கார்த்திக்வேந்தனின் ஏடிஎம் கார்டை யாரோ பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.11,870 பணம் எடுத்துள்ளதாக கார்த்திக்வேந்தனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே இதுகுறித்து கார்த்திக்வேந்தன் சூளைமேடு (F-5) காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்த போலீஸார், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த தல்லா ஶ்ரீனிவாசலு ரெட்டி (27), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 லேப்டாப், 1 செல்போன், 2 ஸ்வைபிங் மெஷின்கள், 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட தல்லா ஶ்ரீனிவாசலு ரெட்டி அவரது கூட்டாளியுடன் சேர்ந்து கடந்த 3 வருடங்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ATM மையங்களுக்கு சென்று, அங்கு பொதுமக்கள் தவறவிட்டு சென்ற Wifi ஏடிஎம் கார்டுகளை எடுத்துள்ளனர். பின்னர் ஏடிஎம் கார்டிலிருந்து பணத்தை ஸ்வைபிங் மெஷின் பயன்படுத்தி வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கும், ஆன்லைன் ரம்மி கணக்குக்கும் பணபறிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தல்லா ஶ்ரீனிவாசலு ரெட்டி விசாரணைக்குப்பின்னர் இன்று (ஏப்.29) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். பொதுமக்கள் ஏடிஎம் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும், அதை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடன் இருக்குமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x