Published : 25 Apr 2024 05:49 AM
Last Updated : 25 Apr 2024 05:49 AM
ரஜோரி: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம், தனமண்டி பகுதியில் மாநில சமூக நலத்துறை ஊழியர் முகம்மது ரசாக் (40) கடந்த திங்கட்கிழமை தனது வீட்டுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். முகம்மது ரசாக்கும் ராணுவ வீரரான அவரது சகோதரர் முகம்மது தாகிரும் ஒரு மசூதியில் இருந்து வெளியில் வரும்போது துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
இதில் முகம்மது ரசாக் உயிரிழந்தார். முகம்மது தாகிர் லேசான காயத்துடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து தனமண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: முகம்மது ரசாக் கொலையில் அபு ஹம்சா என்ற சங்கேத பெயருடைய வெளிநாட்டு தீவிரவாதி ஒருவருக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது. 32 வயதான இவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்.
சம்பவம் நடைபெற்ற நாளில் இவர் பத்தானி சூட், பழுப்பு நிற ஷால் அணிந்திருந்தார். ஆரஞ்சு நிற பை வைத்திருந்தார். ஷத்ரா ஷரீப், டெர்-கி-காலி பகுதிகளில் இவர் தொடர்ந்து பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் எந்த தகவலுக்கும் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT