Published : 25 Apr 2024 05:33 AM
Last Updated : 25 Apr 2024 05:33 AM
சென்னை: சென்னை புழல், காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (30). கணவரைப் பிரிந்து 9 வயது மகன் மற்றும் 5 வயது மகள் தேஜஸ்வினி ஆகியோருடன் வசித்து வந்தார்.
ராயப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவுப் பணி செய்து வந்தார். அப்போது, அங்கு வேலை செய்துவரும் புழல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, சீனிவாசன் திவ்யா வீட்டில் கணவர் போல் தங்கி வந்துள்ளார்.
திவ்யா கடந்த 22-ம் தேதி காலை தனது மகள், மகனை வீட்டில் சீனிவாசனுடன் விட்டுவிட்டுச் சென்றார். பின்னர், குழந்தை தேஜஸ்வினி, குளியலறையில் உள்ள நீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டப்பில் விழுந்துவிட்டதாக சீனிவாசன் கூறி மருத்துவமனையில் சேர்த்தார். தேஜஸ்வினியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
புழல் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மேலும், குழந்தையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், குழந்தை தாக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சீனிவாசனிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, சீனிவாசன் குழந்தையை அடித்து, காலால் மிதித்தபோது குழந்தை இறந்துவிட்டதும், அதை மறைக்க பிளாஸ்டிக் டப்பில் விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சீனிவாசன் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT