Published : 25 Apr 2024 05:16 AM
Last Updated : 25 Apr 2024 05:16 AM
சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புரோக்கர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, கிரிக்கெட் போட்டியை நேரில் ரசிக்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், எவ்வளவு முயன்றும் பலருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதைப் பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கானடிக்கெட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்களும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்து, 12 புரோக்கர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40,396 மதிப்புள்ள 56 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT