Published : 20 Apr 2024 05:33 AM
Last Updated : 20 Apr 2024 05:33 AM

சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பது கடும் குற்றம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: செல்போனில் சிறுவர்களின் ஆபாச படங்களைபதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பசட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த இளைஞர் மனு தாக்கல் செய்தார்

.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம். தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல’’ என்று கூறி, அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்: ‘‘செல்போனில் ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உலகின் அனைத்து தரவுகளையும் எந்த தணிக்கையும் இல்லாமல் பெற முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இன்றைய இளைய சமுதாயம் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆபாச படங்கள் எளிதாக கிடைப்பதால் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர்.

இதனால் அவர்கள் உளவியல், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இருந்து மீள, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தனிப்பட்ட முறையில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது, சம்பந்தப்பட்ட இளைஞர் தரப்பில், ‘‘ஆபாச வீடியோவை இளைஞர் பதிவிறக்கம் செய்து பார்க்கவில்லை. வாட்ஸ்அப் மூலமாக தானாகபதிவிறக்கம் ஆகியுள்ளது. இதில் அந்தஇளைஞரின் தவறு எதுவும் இல்லை. சிறுவர்களின் ஆபாச படங்களை வேறு யாருக்கும் அனுப்பி வைக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது’’ என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘சிறுவர்களின் ஆபாச படத்தை அனுப்பியது யார் என்பதுதொடர்பான விவரங்களை விசாரணையின்போது இளைஞர் தரப்பில் தெரிவிக்கவில்லை. அவர் ஆபாச படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஒரு சிறுவன் ஆபாச படம் பார்ப்பதைகுற்றமாக கருதாவிட்டாலும், சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பது மிகக் கடுமையான குற்றம்’’ என்று கருத்து தெரிவித்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x