Published : 11 Apr 2024 03:24 PM
Last Updated : 11 Apr 2024 03:24 PM

பண மோசடி வழக்கில் ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் கைது @ மும்பை

ஹர்திக், வைபவ் மற்றும் க்ருணால்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியாவின் அண்ணன் வைபவ் பாண்டியா, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.4 கோடி மோசடி செய்த காரணத்துக்காக அவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை நகர காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினர் கடந்த திங்களன்று (ஏப்.8) 37 வயதான வைபவ் பாண்டியாவை நம்பிக்கை மோசடி, மிரட்டல், சதி மற்றும் அது சார்ந்த பிற பிரிவுகளின் கீழ் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். சகோதரர்கள் மூவரும் இணைந்து தொடங்கிய தொழில் நிறுவனத்தில் அவர் இந்த மோசடியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 2021-ல் சகோதரர்கள் மூவரும் இணைந்து தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்கினர். அதில் ஹர்திக் மற்றும் க்ருணால், தலா 40 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீதத்தை வைபவ் முதலீடு செய்துள்ளார். தொழிலை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வைபவ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லாபத்தை மூவரும் பிரித்துக் கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஹர்திக் மற்றும் க்ருணாலுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அதே தொழிலை வேறு ஒரு தனி நிறுவனமாக வைபவ் நிறுவியுள்ளார். அதன் மூலம் ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்பட்டுள்ளார். வைபவின் புதிய நிறுவனம் காரணமாக மூவரும் இணைந்து தொடங்கிய நிறுவனம் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் நேரடியாக ரூ.3 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு இதே காலகட்டத்தில் வைபவ் தனியாக தொடங்கிய நிறுவனத்தின் லாபம் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மேலும், ஜாயிண்ட் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 கோடியை தனது பெயரில் உள்ள கணக்குக்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்து ஹர்திக் மற்றும் க்ருணால் கேட்டுள்ளனர். அப்போது உங்களது பெயருக்கு களங்கம் விளைவிப்பேன் என வைபவ் மிரட்டியுள்ளார். தொடர்ந்து கர் போலீஸ் நிலையத்தில் ஹர்திக் மற்றும் க்ருணாலின் ஆடிட்டர் தரப்பில் வைபவ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வைபவ் குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்த காரணத்தால் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x