Published : 11 Apr 2024 06:33 AM
Last Updated : 11 Apr 2024 06:33 AM

சென்னை | காவலரை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள் 7 பேர் கைது

சென்னை: குடும்பத்தினருடன் காரில் சென்ற காவலர், அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (31). ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் குடும்பத்தினருடன் வில்லிவாக்கத்திலிருந்து அயனாவரம், நியூ ஆவடி சாலை வழியாக வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

நியூ ஆவடி சாலையில், கங்கையம்மன் கோயில் அருகில் சென்றபோது, கஞ்சா போதையில் இருந்த கும்பல், காரின் மீது கற்களை வீசியது. அவர்களை தட்டிக் கேட்டபோது, அவர்கள் வீண் தகராறு செய்து ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில், ஆனந்த், அவரது மனைவி மோனிஷா (30) மற்றும் உறவினர் சஞ்சய் (23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கஞ்சா கும்பலைப் பிடிக்க முயன்றதில் ஒருவன் சிக்கினார். அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில், காயமடைந்த ஆனந்த் குடும்பத்தினரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், பொதுமக்களிடம் சிக்கியவர், அயனாவரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (19) என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா போதையில் நண்பர்களுடன் சேர்ந்து காவலர் குடும்பத்தினரை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, விஜயகுமாருடன், அவரது நண்பர்களான அயனவரத்தை சேர்ந்த யுவராஜ் (21), ஜோஸ்வா (23), பிரவீன் (23), சரத்குமார் (25), கோகுல் (22) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x