Published : 10 Apr 2024 05:40 PM
Last Updated : 10 Apr 2024 05:40 PM
மதுரை: திருமங்கலம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென சீறிப் பாய்ந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரட்டையர் சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் பழ வியாபாரி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடை நடத்துகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் பூத்திருவிழாவுக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி, மணிகண்டன், அவரது மனைவி நாகஜோதி (28), இவர்களது மகன் சிவ ஆத்யா (10), இரட்டையர் மகள்களான சிவ ஆத்மிகா (8) சிவஸ்ரீ (8) மற்றும் மணிகண்டன் தந்தை கனகவேல் ( 58) தாய் கிருஷ்ணவேணி (55) ஆகியோர் காரில் புறப்பட்டு தளவாய்புரத்துக்குச் சென்றனர்.
காரை மணிகண்டன் ஓட்டினார். அவர்கள் கோயிலில் திருவிழா மற்றும் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பினர். வழியில் விருதுநகரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வில்லாபுரத்திற்கு திரும்பினர். இந்நிலையில், இன்று காலை சுமார் 6.45 மணிக்கு மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் அவர்களின் கார் சென்றது. சிவரககோட்டை விலக்கு பகுதியில் சென்றபோது, கார் திடீரென கட்டுபாடு இழந்தாக தெரிகிறது. வேறு வழியின்றி முன்னால் சென்ற நடுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கொய்யாப்பழம் வியாபாரி பாண்டி (53) என்பவரின் டூவீலரில் கார் மோதியது.
அதே வேகத்தில் கார் தாறுமாறாக ஓடிய நிலையில், சுமார் 50 அடி தூரம் சாலையில் சீறிப் பாய்ந்து வலது புறம் சென்ற கார் 2 பல்டி அடித்து கவிழ்ந்தது. அக்கம், பக்கத்தினர் திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்தக் கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், டூவீலரில் சென்ற பாண்டி மற்றும் காரின் சென்ற கனகவேல், கிருஷ்ணவேணி, நாகஜோதி, சிவ ஆத்மிகா சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரிந்தது.
மேலும், காருக்குள் உயிருக்கு போராடி மணிகண்டன், அவரது மகன், மற்றொரு மகளை மீட்டு மதுரை அரசு மருத்துமவனைக்கு அனுப்பினர். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிவஸ்ரீயும் உயிரிழந்தார். இதன்மூலம் இவ்விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. உயிர் தப்பிய மணிகண்டன், அவரது மகனும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த கோர விபத்து குறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT