Published : 06 Apr 2024 05:30 AM
Last Updated : 06 Apr 2024 05:30 AM
கோவை: சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (50). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16) என்ற மகனும், ஜனனி (14) என்ற மகளும் இருந்தனர்.
வரலட்சுமி தையல் தொழிலாளி. யுவராஜ் அங்குள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பும், ஜனனி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.தட்சிணாமூர்த்தி தனது வீட்டின் தேவைக்காக கடன் வாங்கியிருந்தார். ஆனால், அவரால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கியதால், அவர் கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாயமானார்.
வரலட்சுமி அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீஸார் மாயமானோர் பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே கணவர் மாயமானதாலும், வீட்டுச் செலவுக்கு பணம் இல்லாததாலும், கடன் நெருக்கடியினாலும் வரலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. 2 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்த வரலட்சுமிக்கு அவரதுதாயார் தாராபாய் ஆறுதல் கூறிவந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி வரலட்சுமி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாராபாய் துரைப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் மாயமான மூவரையும் தேடி வந்தனர்.
இந்த சூழலில், கோவை நஞ்சுண்டாபுரம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பெண் உட்பட மூவரின் உடல்கள் இருப்பதாக போத்தனூர் ரயில்வே போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்டுஉயிரிழந்தவர்கள் யார் என விசாரித்தனர்.
அதில், உயிரிழந்தவர்கள் வரலட்சுமி, மகன் யுவராஜ், மகள் ஜனனி எனத் தெரியவந்தது. கோயிலுக்கு செல்வதாக கூறி குழந்தைகளுடன் சென்னையில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் கோவைக்கு வந்து, போத்தனூர் பகுதிகளில் சுற்றித் திரிந்ததும், பின்னர்மன உளைச்சலின் காரணமாக நஞ்சுண்டாபுரம் ரயில்வே தண்டவாளத்தில் கேரளா நோக்கிச் சென்ற ரயில் முன்பு பாய்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போத்தனூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT