Published : 05 Apr 2024 08:00 PM
Last Updated : 05 Apr 2024 08:00 PM

“வாழ்நாள் முழுக்க அலைய வைப்பேன்...” - பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்கு

திருப்பூர்: திருப்பூர் அருகே வாகன சோதனையின்போது, தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தேர்தல் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையானது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையான கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர்குறிச்சி பிரிவில் நிலை கண்காணிப்பு குழுவினர் முருகேசன் தலைமையில், உதவி ஆய்வாளர் புகழேந்தி, தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் காரையும் நிலை கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதுடன், வாகன சோதனைக்கு ஆட்சேபம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதையடுத்து, நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஏபி முருகனாந்தம் மிரட்டியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த போலீஸார் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தார்.

அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக குழுவினர் கூறவே, ஆத்திரமடைந்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், “மரியாதையாக பேசிப் பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு அலைய வைத்துவிடுவேன்” என்று பகிரங்கமாகவே மிரட்டினாராம். அப்போது போலீஸார் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறியபோது, தொடர்ந்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த வேட்பாளர், “எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள்” என்று கேட்டதோடு, “மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா?” என்று கேட்டார்.

இது தொடர்பாக முருகேசன் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் குன்னத்தூர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

ஏ.பி.முருகானந்தம் தரப்பில் கூறும்போது, “என் பிரச்சாரத்தை முடக்கும் நோக்கில் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு சோதனையின்போது, அரைமணிநேரம் ஆகிறது. இதனால் எனது பிரச்சாரம் தடைபடுகிறது. இதைத்தான் நான் தெரிவித்தேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x