Published : 24 Mar 2024 04:10 AM
Last Updated : 24 Mar 2024 04:10 AM
சென்னை: மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வடபழனி குமரன் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குவிரைந்து சென்ற வடபழனி போலீஸார், காயங்களுடன் கிடந்த முதியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், காயம் அடைந்த நபர்யார், அவரை யார் தாக்கியது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், பெண் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றி போலீஸார் கூறும் போது, ‘‘காயமடைந்த நபர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி ( 50 ). சாலையோரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியில் சாலை ஓரத்தில்தங்கி இருந்த சரவணன் ( 50 ),புவனேஸ்வரி ( 32 ) ஆகியோருடன் சேர்ந்து சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளார்.
கல்லால் தாக்குதல்: அப்போது, அவர்களிடையே, தகராறு ஏற்பட்டதில், கீழே கிடந்த கல்லை எடுத்து சுப்பிரமணியை இருவரும் தாக்கிவிட்டு, எதுவும் தெரியாதது போல் படுத்து தூங்கி உள்ளனர். பலத்த காயமடைந்த சுப்பிரமணி, மருத்துவமனையில் உயிரிழந்தார்’’ என்றனர். சரவணன், புவனேஸ்வரியை கைது செய்த போலீஸார், விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT