Published : 23 Mar 2024 06:49 AM
Last Updated : 23 Mar 2024 06:49 AM
விசாகப்பட்டினம்: பிரேசில் நாட்டிலிருந்து கப்பல் கன்டெய்னர் மூலம் 25,000 கிலோ போதைப்பொருள் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னரை சோதனையிட்டனர். நேற்று அந்த கன்டெய்னரில் குறிப்பிட்டிருந்த காக்கிநாடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் அடங்கிய பார்சலில் விஜயவாடா முகவரி இருந்தது. இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில், தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தற்போது பல லட்சம் கோடி மதிப்புள்ள ‘ட்ரை ஈஸ்ட்’ வகை போதைப்பொருள் ஏற்றப்பட்ட கன்டெய்னரை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து எஸ்இகேயு -4375380 என்ற எண் கொண்ட கன்டெய்னரில் உலர்ந்த ஈஸ்ட் வகையை சேர்ந்த போதைப்பொருள் கப்பல் மூலம் விசாகப்பட்டினத்திற்கு வந்தது. இந்த கன்டெய்னர் சந்தியா ஆக்வா பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜெர்மன் துறைமுகம் வழியாக டெல்லிக்கு வந்த இந்த கன்டெய்னரை ‘ஸ்கிரீன்’ செய்தபோது, அதில் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக இது குறித்து மின்னஞ்சல் மூலம் சிபிஐ அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்டசோதனையில் மொத்தம் 25,000 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 49 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கோகைன், மார்ஃபின், ஹெராயின், ஆம்பட்டேயின், மெஸ்கலின் போன்ற போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு பல லட்சம் கோடியாகும்.
இது தொடர்பாக பிரகாசம் மாவட்டம், ஈதுமூடி பகுதியை சேர்ந்த சந்தியா ஆக்வா நிறுவனஇயக்குநர் கே. ஹரிகிருஷ்ணா மற்றும் ஊழியர்கள் கிரிதர், ஸ்ரீநிவாசகிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பரத்குமார் ஆகிய நால்வரிடம் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அப்போது, நிறுவன ஊழியர்களோ, இயக்குநரோ சரிவர பதில் அளிக்கவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT