Last Updated : 21 Mar, 2024 06:42 PM

1  

Published : 21 Mar 2024 06:42 PM
Last Updated : 21 Mar 2024 06:42 PM

ஓசூரில் ‘விஸ்வகர்மா’ கடன் பெயரில் டோக்கன் தந்து பண மோசடி - அதிகாரிகள் நடவடிக்கை

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் நகரில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்றுத் தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கியவர்களிடம் கணிணியை பறிமுதல் செய்ய உதவி ஆட்சியர் பிரியங்கா உத்திரவிட்டார்.

ஓசூர்: ஓசூரில் துணிக்கடையில் வைத்து மத்திய அரசின் 'விஸ்கர்மா’ திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கித் தருவதாக பொது மக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தவரின் கணினி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூர் தாசில்தார் அலுவலகம் சாலையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள துணிக்கடையில், ராம்குமார், உமாமகேஸ்வரி ஆகியோர் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் வாங்கி தருவதாகக் கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடன் உதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.

பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டது. பின்னர், அதற்கு உத்திரவாதமாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்கா நேரில் வந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் விசாரணை செய்தார்.

பின்னர் துணிக்கடையில் ஆய்வு செய்தார். துணிக்கடையில் அனுமதியின்றி மத்திய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவாதாக பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கியதாக, அங்கிருந்த டோக்கன்கள் மற்றும் கணினிகளை பறிமுதல் செய்தார். மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.

இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்கா கூறும்போது, 'தேர்தல் நடத்தை முறைகள் இருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயணாளிகள் இசேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் இங்கு அரசு அனுமதி பெறாமல் துணிக் கடையில் வைத்து சிலர் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டுள்ளேன்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பெற விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் இசேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இது போன்ற உரிய அனுமதி பெறாதவர்களிடம் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம்'' எனக் கூறினார்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் நகரில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று தருவதாக டோக்கன் வழங்கியது குறித்து பொதுமக்களிடம் உதவி ஆட்சியர் பிரியங்கா விசாரணை செய்தார்

மேலும், இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் கூறும்போது, ''தேர்தல் விதிமுறை நடைத்தையில் உள்ள போது, சந்திரசூடேஸ்வரர் நகரில் துணிக்கடை ஒன்றில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாக டோக்கன் வழங்கியது தவறு, இது தொடர்பாக நகர காவல்நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மற்றும் டோக்கன் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளோம். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துநடவடிக்கை எடுப்பார்கள்'' எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x