Published : 16 Mar 2024 08:06 AM
Last Updated : 16 Mar 2024 08:06 AM
மதுரை: நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் ஊத்துமலையில் செயல்படும் தனியார் நிதி நிறுவன சேமிப்புத் திட்டத்தில் 10 பவுன் நகை அடகுவைத்தால் வட்டிச் சலுகையும், ரூ.10 ஆயிரம் போனஸும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி மோசடிசெய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நிறுவன ஊழியர்கள் வர்ஷா, கலைச்செல்வி, முத்தமிழ்செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளைதுரை, காளீஸ்வரி, மேலாளர்கள் இளவரசன், இமானு வேல், கணக்குத் தணிக்கையாளர் கண்ணன் ஆகியோர் மீது ஊத்துமலை போலீஸார் கடந்த பிப்.1-ம்தேதி வழக்கு பதிவு செய்தனர்.இதில் முன்ஜாமீன் கோரி முத்தமிழ்செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளத்துரை, காளீஸ்வரி ஆகியோர் உயர் நீதி மன்றக் கிளையில் மத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தென் மண்டலஐ.ஜி. பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மனுநீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தென் மண்டல ஐ.ஜி. தாக்கல் செய்த அறிக்கையில், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தனியார் நிதி நிறுவனத்தினர் மற்றும் அவர்களது முகவர்கள் வட்டிச் சலுகை தருவதாகக் கூறிமக்களிடம் ஏராளமான நகைகளைப் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 7 கிளை களில் ரூ.3.64கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கநகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூடுதல் அரசு வழக்கறிஞர் பா.நம்பி செல்வன் வாதிடும்போது, “தூத்துக்குடியில் நகை மோசடி வழக்கு அடிப்படையில், தனியார்நிதி நிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போலீஸாரும் மோசடிக்கு துணையாக உள்ளனர்” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “அப்பாவி மக்களின் நகைகளைப் பெற்று தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்துள்ளது. எனவே, மனுதாரர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட, உயர் நீதிமன்றமதுரைக் கிளையின் அதிகார வரம்புக்குக் கீழ் வரும் மாவட்டங்களில் தனியார் நிதி நிறுவன மோசடி குறித்து மாவட்ட ஆட்சியரும், போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும்.
முறைகேடு கண்டறியப்பட்டால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விவரம், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, தனியார் நிதி நிறுவனத்தினருடன் கூட்டு சேர்ந்து மோசடிசெய்த நபர்கள் குறித்து போலீஸார் ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT